search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்"

    பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இன்று தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    விருதுநகர்:

    பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தக்கூடாது. பசுமை பட்டாசுகளை தான் தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

    இந்த உத்தரவுப்படி பட்டாசுகள் தயாரிக்க முடியாது, நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டாசு ஆலைகள் கடந்த நவம்பர் மாதம் 13-ந் தேதி மூடப்பட்டன.

    ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் செயல்பட்டு வந்த 1070 பட்டாசு ஆலைகளும் அடைக்கப்பட்டன. இதனால் இந்த தொழிலில் நேரடியாக ஈடுபட்ட 4 லட்சம் தொழிலாளர்கள், மறைமுகமாக ஈடுபட்ட 5 லட்சம் தொழிலாளர்கள் என 9 லட்சம் பேர் வேலை இழப்பை சந்தித்துள்ளனர்.

    கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தவிப்புக்குள்ளான தொழிலாளர்கள், பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை, கஞ்சி தொட்டி திறப்பு, ஆர்ப்பாட்டம், மறியல் என பல போராட்டங்களை நடத்தியும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வேதிப்பொருட்கள் விற்பனை செய்யும் வினியோகஸ்தர்கள் மற்றும் பட்டாசு சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பட்டாசு தொழிலுக்கான பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பிரச்சினைக்கு தீர்வு காண, தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று காலை சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள சோனி மைதானத்தில் பட்டாசு தொழிலாளர்கள் திரண்டனர். முதல் நாளான இன்று காத்திருப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர்.

    காலையில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நடக்கிறது. இதில் பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்த பல்வேறு நிறுவன பணியாளர்களும் பங்கேற்றனர். நாளை நடைபெற உள்ள போராட்டம் குறித்து இன்றைய போராட்டத்தின் முடிவில் முடிவு எடுக்கப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    பட்டாசு தொழிலாளர் நலன் காக்க நல்ல முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். #FireCrackers #Thirumavalavan

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மற்றும் மத்திய அரசு இணைந்து விரைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் வல்லுநர் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

    இந்த நேரத்தில் தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்து ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்க மத்திய அரசு முன் வரவேண்டும்.

    குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தற்போது தார்ப்பாய் வழங்கப்பட்டுள்ளது. அது ஒரு தற்காலிக ஏற்பாடு. அவர்களுக்கு புயலால் பாதிக்கப்படாத வகையான வீடுகளை கட்டித்தர வேண்டும்.

    மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்குவது என்பது போதுமானதாக இல்லை. அவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க மத்திய-மாநில அரசுகள் முன்வர வேண்டும். கால் நடைகள் உயிரிழப்பு மற்றும் பயிர் சேதங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்.

    சிவகாசியில் பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது .

    எனவே இந்த பிரச்சினையில் மத்திய அரசு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

    மாசுபடுவதற்கு பட்டாசுகள் மட்டுமே காரணம் இல்லை. மாசில்லாத பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்கு வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. அதற்குரிய ஆய்வு மற்றும் நடைமுறை தொடர்பான வழிகாட்டுதல் தேவை.

    எனவே மத்திய அரசு அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீதி மன்றம் வழிகாட்டலை தந்தாலும் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #FireCrackers #Thirumavalavan

    ×